சென்னை: மேக் இன் இந்தியா என கூறிவிட்டு, வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி ரஷ்யாவில் உற்பத்தி செய்கிறார். அவரது இந்த செயல் அடிமை இந்தியாவை தான் உருவாக்கும் என்று கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மோடி ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாவற்றையும் இந்தியாவில் தயாரிப்பது (மேக் இன் இந்தியா) என்ற கோஷத்தை பரப்பினார். இன்றைக்கு ‘மேக் இன் இந்தியா’ என்று சொல்லி விட்டு, வந்தே பாரத் ரயில்களை ரஷ்யாவில் உற்பத்தி செய்கிறார் மோடி. 120 வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவிற்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட இருக்கிறது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிக்கிற அளவுக்கு தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது. ஆனால் நம்முடைய பணத்தை கொண்டு போய் ரஷ்யாவில் முதலீடு செய்கிறார். உள்நாட்டில் முடிந்த அளவுக்கு உற்பத்தி செய்தால் தான் ஒரு வல்லரசாக முடியும். மோடி செய்வது அடிமை இந்தியாவைத் தான் உருவாக்கும். அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யாவில் இந்தியாவினுடைய ஏராளமான திட்டங்களை கொடுத்து அதன் மூலமாக பொருட்களை வாங்குகிறார். இது வளர்ச்சியடையாத நாடுகள் செய்யக் கூடிய விஷயம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.