டெல்லி: வந்தே பாரத் ரயில்கள் முற்றிலும் உள்நாட்டில் தயாரிப்பதற்கு இலக்கு வைத்துள்ள ஒன்றிய அரசு அந்த ரயில்களுக்கான சக்கரங்கள் மற்றும் பிரதான அச்சு உள்ளிட்ட முக்கிய பாகங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வது தெரியவந்துள்ளது. இறக்குமதியை குறைக்கும் நோக்கில் உள்நாட்டு உற்பத்திக்கான ஊக்கத்தொகை திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. ஒன்றிய பாஜக அரசால் பெரிதும் புகழ்ந்து பேசப்படும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் 75 நகரங்களை இணைக்கின்றன. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் பாகங்களை கொண்டே வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பது இலக்காகும். ஆனால், 15% இறக்குமதி செய்யப்பட்ட பாகங்கள் இந்த ரயில்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இறக்குமதி செய்யப்படும் பாகங்களில் ரயில்களின் முக்கியமான பாகங்களான சக்கரங்கள், பிரதான அச்சு ஆகியவற்றைக்கூட சீனாவிடம் இருந்து இந்திய ரயில்வே பெற்று வருவது தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரலில் மட்டும் நவீன ரயில்களுக்கான 33,000 சக்கரங்கள் சீன நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அவுரங்காபாத்தைச் சேர்ந்த மற்றொரு நிறுவனத்திற்கும் பணி ஆணை கொடுக்கப்பட்டாலும் அந்த நிறுவனம் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்தே இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது.
இந்த இறக்குமதியை குறைத்து தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்ய வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு பி.எல்.ஐ. ஏற்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. 2047 ஆண்டுக்குள் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது ரயில்வே துறையின் திட்டமாகும். அதுவும் முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரித்தவையாக இருக்க வேண்டும் என்பது இலக்காக உள்ளது. ஆனால் திட்டம் தொடங்கி 4 ஆண்டுகளாகியும் வந்தே பாரத் ரயில்களின் முக்கிய பாகங்கள் இறக்குமதி செய்யப்படுவது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.