*ஜமாபந்தி விழாவில் ஆரணி எம்பி பெருமிதம்
வந்தவாசி : வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. கலால் உதவி ஆணையாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் ஜலால், துணைத் தலைவர் சீனிவாசன், பேரூராட்சி தலைவர்கள் ராதா ஜெகவீரபாண்டியன், வேணி ஏழுமலை, நகரச் செயலாளர் தயாளன், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் பொன்னுசாமி வரவேற்றார்.
இதில் ஆரணி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு 177 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர பைக், விவசாயிகளுக்கு உபகரண பொருட்கள் உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: வந்தவாசி திண்டிவனம் நெடுஞ்சாலை செய்யாறு சாலை, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை ஆகிய சாலைகள் 4 வழி சாலைகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் இருந்து போளூர் வரை வந்தவாசி வழியாக கழிவறை, நிழல்கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளின் கூடிய இருவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிராமப்புறங்களில் உள்ள சாலைகளும் தமிழக முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம் மூலமாக தரமான சாலைகள் அமைக்கப்பட்டு தற்போது தங்கு தடையின்றி அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரும் வகையில் சாலைகள் நல்ல நிலையில் உள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியில் வந்தவாசி நெடுஞ்சாலை துறைக்கு ரூ.15 கோடி தான் நிதி ஒதுக்கீடு செய்தனர். ஆனால் கடந்த 4 வருட திராவிட மாடல் ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் தனி கவனத்தில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தவாசி நகரை சுற்றி அனைத்து சாலைகளும் அகலமான சாலைகளாக மாற்றப்பட்டு போக்குவரத்துக்கு சிறந்த நகரமாக வந்தவாசி உள்ளன.
விவசாயிகள் தங்களது கரும்பு ஏற்றி வரும் டிராக்டரை வந்தவாசி நகருக்குள் வந்து சென்றார். போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டு காவலர்களுக்கும் டிராக்டர் உரிமையாளர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலை மாறி தற்போது அனைத்து கரும்பு வாகனங்களும் புறவழிச் சாலை வழியாக செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்று வருகிறது. விவசாயிகளின் துயரத்தை போக்கும் அரசு திராவிட மாடல் அரசு என்பது அனைவருக்கும் தெரிந்தது என்றார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் குமரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் தினகரன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் இளங்கோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் உதயகுமார் நன்றி கூறினார்.