குஜராத்: ‘வந்தாரா’ வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். வனத்தை தவிர்த்து இன்றைக்கு விலங்குகளுக்கு சொர்க்க பூமியாக ஆனந்த் அம்பானியின் வந்தாரா மாறி வருகிறது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ‘வன்தாரா’ என்ற பெயரில் வன விலங்குகள் மீட்பு, மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேசன் சார்பில் ஆனந்த் அம்பானி இந்த மையத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த மையத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி, அவர்களது மகன் ஆனந்த் அம்பானி மற்றும் மருமகள் ராதிகா ஆகியோரும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். சிங்க குட்டிகள், ஒட்டகச் சிவிங்கி உள்ளிட்டவற்றிக்கு பிரதமர் மோடி உணவளித்து மகிழ்ந்தார். அவர் வன்தாராவில் உள்ள வனவிலங்கு மருத்துவமனையும் பார்வையிட்டார். அங்கு, அவர் கால்நடைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ (MRI), சி.டி (CT) மற்றும் ஐ.சி.யு., (ICU) உள்ளிட்ட வசதிகளை பார்வையிட்டார். கால்நடை மருத்துவர்கள், நர்ஸ்கள் ஆகியோருடன் பிரதமர் கலந்துரையாடினார்.
வன்தாரா மையம், ஜாம்நகர் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு மைய வளாகத்தில் 3 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு 43 வகை உயிரினங்களில், 2 ஆயிரம் வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. இயற்கையான வன விலங்குகள் வாழிடம் போன்று இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் வந்தாரா 200-க்கும் அதிகமான யானைகளை மீட்டெடுத்து பராமரித்து வருகிறது. ஆனந்த் அம்பானியின் கனவு திட்டமான ‘வன்தாரா’வில், வன உயிரியல் நிபுணர்கள் உட்பட 2,100 பேர் பணியாற்றுகின்றனர். விலங்குகள் நலத்தை பாதுகாக்கும் அதே வேளையில், வன விலங்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வையும் இந்த மையம் ஏற்படுத்தி வருகிறது.