கூடுவாஞ்சேரி: வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனைக்கான தினம்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டு களித்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பூங்கா இயக்குனரிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுக்கும் எந்தவித நடவடிக்கும் எடுக்காததால், ஏஐசிசிடியு சங்க மாநில சிறப்பு தலைவர் இரணியப்பன் தலைமையில் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று தொழிலாளர்கள் போராட்டம் அறிவித்தனர்.
இந்நிலையில், ஓட்டேரி போலீசார் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் இரணியப்பன் வீட்டிற்கு சென்று போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால், அதற்கு அவர் திட்டமிட்டபடி போராட்டம் நடத்துவோம் என்றார். பின்னர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் 10க்கும் மேற்பட்ட போலீசார் அவரது வீட்டிற்கு மீண்டும் சென்று இரணியப்பனை கைது செய்து கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் தொழிலாளர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு திறந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைக் கண்டதும், கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரணியப்பன் மற்றும் முக்கிய நிர்வாகிகளை வேனில் ஏற்றிசென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள இயக்குனர் ஆசிஷ்குமார்ஷீவத்சவாவிடம் கொண்டு வந்தனர். அங்கு 1 மணி நேரம் இயக்குனர் போராட்டகாரர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
பின்னர், தமிழக அரசிடம் பரிந்துரை செய்து பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் தற்போது வாங்கும் சம்பளத்தை விட இரு மடங்கு உயர்த்தப்படும். மேலும், ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்த்து கொள்ளப்படும் என உறுதி அளித்தார். இதனை அடுத்து, அங்கிருந்த அனைவரும் ஆர்ப்பாட்டதை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.