கூடுவாஞ்சேரி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று காலை நீர்யானை கடித்ததில் பராமரிப்பாளர் படுகாயமடைந்தார். இதனால் பரபரப்பு நிலவியது. வண்டலூர் அடுத்த ஓட்டேரி விரிவு பகுதியை சேர்ந்தவர் குமார் (55). வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 25 ஆண்டுகளாக விலங்குகள் பராமரிப்பாளராக வேலைபார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக நீர்யானையையும் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் வழக்கம் போல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது. அப்போது பணியில் இருந்த குமார், நீரில் மூழ்கி கிடந்த நீர்யானையை சுத்தப்படுத்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
திடீரென நீரில் மூழ்கியிருந்த நீர்யானை திடீரென வாயை பிளந்தபடி பராமரிப்பாளர் குமாரின் கழுத்தை கடித்தது. இதில் அவர் அலறி சத்தம் போட்டுள்ளார். இதை கேட்டு சக பணியாளர்கள் ஓடிவந்து, குமாரை காப்பாற்ற நீண்ட நேரம் போராடினர். ஒருவழியாக படுகாயத்துடன் அவரை மீட்டனர். பின்னர் அவரை பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பூங்கா நிர்வாக அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.