சென்னை: சுற்றுலா பயணிகள் கோரிக்கையை ஏற்று, வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்க்க 2 ஏசி வாகனங்கள் வாங்க பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த வாகனங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், மான், யானை உள்ளிட்ட விலங்குகள் மற்றும் ஏராளமான பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
தினசரி ஏராளமான பொதுமக்கள் இந்த பூங்காவுக்கு சென்று உற்சாகமாக பொழுதை கழித்து வருகின்றனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலாக காணப்படும். சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவை பேட்டரி வாகனங்கள் மூலம் சிரமமின்றி சுற்றிப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சிங்க சவாரி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காலத்தில் சிங்கங்கள் அடுத்தடுத்து நோய்த்தொற்றால் உயிரிழந்ததை அடுத்து சிங்க சவாரி செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்கள் உள்ளன. பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அண்மையில் சிங்க சவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
நடப்பாண்டு கோடை விடுமுறை காலத்தில் மீண்டும் தொடங்கப்பட்ட சிங்க சவாரிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெருகியது. இந்நிலையில், வண்டலூர் பூங்காவில் சிங்க சவாரியை மேம்படுத்த நிர்வாகம் தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது, பார்வையாளர்கள் சிங்கங்கள் மற்றும் மான்களை குளுகுளுவென்று பார்க்கும் வகையில் 2 ஏசி வாகனங்கள் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, பூங்காவின் இயக்குநர் னிவாஸ் ரெட்டி கூறுகையில், ‘‘சிங்கம் மற்றும் மான் சவாரிகளை பார்வையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். வார இறுதி நாட்களில் மட்டுமின்றி, வார நாட்களிலும் கூட பார்வையாளர்கள் பலரும் வரிசையில் நின்று பேட்டரி வாகனங்களில் சிங்கம் மற்றும் மான்களை பார்த்துச் செல்கின்றனர். இந்நிலையில், பார்வையாளர்கள் வசதிக்காக இந்த மாத இறுதிக்குள் 2 ஏசி வாகனங்கள் பூங்காவிற்கு வந்துவிடும். இதனையடுத்து, பார்வையாளர்களுக்காக ஏசி வாகனங்களை இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதன்மூலம் பொதுமக்கள் சிங்கம் மற்றும் மான்களை கண்டு ரசிக்கலாம்,’’ என்றார்.