சென்னை: காதலுடன் பைக்கில் சென்ற காதலி, வண்டலூர் உயிரியல் பூங்கா சாலை வளைவில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கத்தை சேர்ந்தவர் காமேஷ் (25). காஞ்சிபுரம் கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நிஷா (23). இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இருவரும் நேற்று காலை பைக்கில் கோவளம் கடற்கரைக்கு புறப்பட்டனர்.
வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே உள்ள ஜிஎஸ்டி சாலை வளைவில் சென்றபோது நெடுஞ்சாலை துறையின் அலட்சியப்போக்கால் அங்கு இரும்பு கம்பிகள் நீட்டிக் கொண்டும், ஜல்லி கற்கள் பரப்பிக்கொண்டும் இருந்ததால் அதில் நிலை தடுமாறி இருவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். இதில் காதலி நிஷா தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார். இதனைக் கண்ட காமேஷ் அழுது புரண்டார்.
சிறிது நேரத்தில் காதலன் காமேஷ் மடியில் நிஷா துடிதுடித்தபடி பரிதாபமாக பலியானார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த நிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து காமேஷிடம் விசாரித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இருவரும் ஹெல்மெட் அணியாமலும் பைக்கில் சென்றதும், காமேஷ் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பைக்கை ஓட்டி சென்று விபத்தில் சிக்கியதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.