கூடுவாஞ்சேரி: வண்டலூர் -கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் தொடங்கி பழைய மாமல்லபுரம் சாலையில் இணையும் 18 கிலோ மீட்டர் கொண்ட வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை ஓரத்தில் 30க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன.
இதில் ஏராளமான தொழிற்சாலைகள், கம்பெனிகள், தனியார் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இங்கிருந்து தினந்தோறும் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மாணவர்கள், அன்றாடம் வேலைக்கு சென்று வருவோர் என அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்து செய்து வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் தினம்தோறும் தொழிற்சாலைகள் கம்பெனிகள் மற்றும் ஏராளமான கிரஷர்கள் இயங்கி வருவதால் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் நாள்தோறும் கடும் போக்குவரத்து ஏற்படுகிறது.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தாம்பரம் மாநகர காவல் துறை மூலம் விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் கூறி இருப்பதாவது: நேற்று முதல் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், இதேபோல் மாலை 4 மணி முதல் 10 மணி வரையிலும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என தாம்பரம் மாநகர காவல் துறையினர் அறிவித்துள்ளது.