செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பேருந்து நிலையம் எதிரே சார்-பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. செய்யூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தினமும் இங்கு நிலம், வீடு வாங்குதல், குத்தகை பத்திரம், கிரயம், தானம், செட்டில்மென்ட் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பிரச்னைகளுக்கு இங்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பசுபதி என்பவர் சார்-பதிவாளராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த டிசம்பர் மாதம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது தலைமை எழுத்தர் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். அதன்பின், இங்கு புதிய சார்-பதிவாளர் நியமிக்கப்படவில்லை.
இதனால், பத்திர நகல், பிறப்பு, இறப்பு, ஈசி உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த அலுவலகத்திற்கு புதிதாக சார்-பதிவாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இங்கு புதிய சார்-பதிவாளரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.