சென்னை: வண்டலூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லைகளில் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக பாலாஜி தங்கவேல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் , உள்ளாட்சி அமைப்புகள் குப்பைகளை அகற்றுவதில் சுணக்கம் காட்டினால் அதன் மீது உரிய உத்தரவை வழங்க தீர்பாயம் தயங்காது. மனுதாரர் குறிப்பிட்டுள்ள பகுதி, பெருங்களத்தூரில் இருந்து சாதனாதாபுரம், ஆலப்பாக்கம், நெடுகுன்றம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் வனப்பகுதியின் வடக்கு எல்லையில் உள்ள 1.2 கி.மீ. சாலை.
இந்த பகுதியில், சாலையைப் பயன்படுத்தும் உள்ளூர்வாசிகள் தங்கள் வீட்டுக் கழிவுகளை சாலையின் ஓரத்தில், அதாவது வனப்பகுதி எல்லையில் வீசுகின்றனர். கழிவுகளை அகற்றுவதற்கான தொட்டிகள் இல்லாததால் குப்பைகளை அங்கே கொட்டுகின்றனர் என மாவட்ட வன அலுவலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். வனப்பகுதியில் இருந்து வரும் மான்கள் சாலையைக் கடந்து, விமானப்படை நிலையம், தாம்பரம் வழியாக சேலையூருக்குச் சென்று திரும்புவதால், அப்பகுதி புள்ளிமான் நடைபாதையின் ஒரு பகுதியாக இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் முன்மொழியப்பட்ட கிழக்கு புறவழிச் சாலையை முடித்தவுடன், வனத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை மானுடவியல் அழுத்தங்களிலிருந்து பாதுகாக்க ஒரு சுற்றுச்சுவர் கட்டப்படும் என்று மாவட்ட வன அலுவலர் கூறினார். விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்வதும், விழிப்புணர்வு பிரசாரம் செய்வதும் பிரச்னையை தீர்க்காது என குறிப்பிட்ட வன பாதுகாப்பு அலுவலர் அப்பகுதியில் உருவாகும் திடக்கழிவுகளை தரம் பிரிக்க உரிய இடம் ஒதுக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட அமர்வு இந்த விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு கலெக்டர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.