சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மேம்பாட்டுக்காக சன் டி.வி. இந்த ஆண்டு மேலும் ரூ.4.42 கோடி நிதிஉதவி வழங்கியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவ சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத்திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த சன் டி.வி. 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது.
இதற்கான காசோலையை, தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் சீனிவாச ரெட்டி மற்றும் அதிகாரிகளிடம் சன் டி.வி. சார்பில் காவேரி கலாநிதி மாறன் கடந்த ஆண்டு வழங்கினார். இந்த நிதியைப் பயன்படுத்தி, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரவு நேரத்தில் நடமாடும் வவ்வால், ஆந்தை உள்ளிட்ட பறவைகள், தேவாங்கு, புனுகுபூனை, முள்ளம்பன்றி ஆகிய விலங்குகளின் நடமாட்டத்தை நிலவு வெளிச்சத்தில் பார்க்கும் வித்தியாசமான அனுபவம் தரும் கண்காட்சி அரங்கம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக சன் டி.வி. குழுமம் சார்பில் இந்த ஆண்டு மேலும் 4 கோடியே 42 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை சன் டி.வி. குழுமம் சார்பில் காவேரி கலாநிதி மாறன், பூங்காவின் இயக்குனர் ஆஷிஷ்குமார் வத்சாவாவிடம் வழங்கினார். இந்த நிதியை பயன்படுத்தி அண்ணா உயிரியல் பூங்காவில் குரங்குகள், நரிகளுக்கான இரவு நேர கூடங்கள் மற்றும் மான் உலாவும் இடங்களை சீரமைக்கவும், பொது மக்கள் பயன்பாட்டிற்காக மேலும் 6 பேட்டரி வாகனங்கள், 28 பயணிகள் பயணிக்கும் வகையிலான 2 சவாரி வாகனங்களை வாங்கவும் பயன்படுத்த உள்ளதாக பூங்கா அதிகாரிகள் கூறினர்.