சென்னை: வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் புதிய படப்பை மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் குறைந்து, பொதுமக்களுக்கு பெரும் நன்மை ஏற்பட்டுள்ளது. முக்கியமான வண்டலூர் – வாலாஜாபாத் மாநில நெடுஞ்சாலை (34 கி.மீ நீளம்) தற்போது 6 வழிசாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இச்சாலையில் அமைந்துள்ள ஒரகடம் சிப்காட் தொழில்துறை பூங்காவில் நிசான், அப்பல்லோ டயர்ஸ், ஆல்ஸ்டோம், JD, இன்பெக் இந்தியா போன்ற முன்னணி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இதன் காரணமாக, படப்பை பகுதியில் உள்ளூர் மற்றும் கனரக வாகனங்கள் கூடுதல் எண்ணிக்கையில் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டுவந்தது. இந்த நெரிசலை குறைக்கும் நோக்கில், 2019ஆம் ஆண்டு ரூ.26 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் அரசாணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து அரசின் ஆய்வு கூட்டங்கள் மற்றும் திட்ட முன்னெடுப்புகள் செயல்படுத்தப்பட்டு, 16 நவம்பர் 2021 அன்று ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன.
பணிகள் நிறைவு பெறும் நிலையில் மின் கம்பங்கள் மற்றும் பிற பயன்பாட்டு வசதிகளை மாற்றும் பணிகள், பேருந்து நிறுத்த இடமாற்றம் போன்ற இடையூறுகள் தீர்க்கப்பட்டு, மேம்பாலம் தற்போது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், படப்பை பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். மேலும், சாலமங்கலம், ஆரம்பாக்கம், மண்ணிவாக்கம் மற்றும் கரசங்கல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இது மிகுந்த நன்மை பயக்கும்.
* மேம்பாலத்தின் முக்கிய விவரங்கள்:
நீளம்: 700 மீட்டர், அகலம்: 17 மீட்டர் (4 வழிசாலை) கண்கள் (Spans): 11, இந்த புதிய மேம்பாலம் திறக்கப்படுவதால், வண்டலூர் – வாலாஜாபாத் சாலை வழியாக பயணிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பானவும், சீரானவும் பயண அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது