கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த ஊனைமாஞ்சேரி, காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (32). இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. மனைவி மட்டும் உள்ளார். குழந்தைகள் இல்லை. இவர், வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் மெக்கானிக் கடை வைத்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு நள்ளிரவு 1 மணி அளவில் தனது பைக்கில் வீடு திரும்பினார்.
அப்போது, கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பாஸ்கரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
பின்னர், சிகிச்சை பலன் அளிக்காததால் அவர் மூளைசாவு அடைந்தார். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் கண்கள் தவிர மற்ற 8 உடல் உறுப்புகளை தானம் செய்தனர். இதனைதொடர்ந்து, அவரது உடல் நேற்று மதியம் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது தாம்பரம் ஆர்டிஓ சிராஜ்பாபு, வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா, ஊனைமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் உள்ளிட்டோர் அரசு மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.