சோழமன்னன் ஒருவன் தன் தலைநகரமான உறையூருக்கு அருகே, இப்போது வயலூர் அமைந்துள்ள இடத்தில் வேட்டையாடி விட்டுத் திரும்பினான். வழியில் கரும்பு ஒன்று மூன்று கிளைகளுடன் வளர்ந்திருப்பதை அதிசயமாகப் பார்த்தான். ஒரு ஆர்வத்துடன் மன்னன் அதை ஒடித்தபோது அதிலிருந்து உதிரம் கசிந்தது கண்டு திடுக்கிட்டான். உடனே, அந்தக் கரும்பை பூமியிலிருந்து பறிக்கச் சொன்னான்.
அதேபோல அவர்கள் செய்தபோது, அங்கு ஒரு சிவலிங்கம் இருந்தது! முக்கண்ணன்தான் மூன்று கிளை கரும்பாக தனக்கு அடையாளம் காட்டினானோ என்று அந்த தெய்வீக அருளில் மெய்மறந்தான். பிறகு அங்கேயே ஈசனுக்கு ஒரு கோயில் அமைத்தான். இவரே ஆதிநாதர் என்ற அக்னீஸ்வரர். மறப்பிலி நாதர் என்றும் இவர் வணங்கப்படுகிறார். இறைவி ஆதிநாயகி, முன்னிலை நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். தல விருட்சம் வன்னிமரம்; தீர்த்தம், வன்னி மற்றும் சக்தி தீர்த்தங்கள்.
ஆதிநாயகி அம்மன் சந்நதி தெற்கு பார்த்து அமைந்துள்ளது அபூர்வமானது. ஆதிநாதர் சந்நதியில் சுந்தர தாண்டவமூர்த்தியின் விக்ரகம் உள்ளது. இந்த நடராசர் திருஉருவத்தில் திருவாசி இல்லை. காலடியில் முயலகனும் இல்லை. சிரத்தில் சடாமுடி இல்லை; கிரீடம் மட்டும் உள்ளது. இவர் இப்படி கால் தூக்காமல் நடன நளினத்தில் தோன்றுவதை சுந்தர தாண்டவம் என்கிறார்கள்.
இங்கு தரிசனத்துக்கு வருபவர்கள் முதலில் ஆதிநாதரையும், ஆதிநாயகியையும் வழிபட்ட பின்னரே முருகப் பெருமான் சந்நதிக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம். தன் வேலால் சக்தி தீர்த்தம் உருவாக்கி அதில் நீராடியபின் தாய் தந்தையரை, தேவர்கள் காண பூஜை செய்யும் புதல்வனாக விளங்குகிறார் இந்த முருகப் பெருமான். அதுவும் வள்ளி தேவசேனா சமேதராக பூஜை செய்வது தனிசிறப்பு. சுவாமிமலையில் தந்தைக்கு உபதேசம், இங்கு தாய் தந்தையை வணங்கி பாதம் பணியும் திருக்குமரனாக காட்சி தருகிறார்.
‘தாயிற் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’ என்பதை மக்கள் மனதில் பதியச் செய்ய தானே வழி காட்டுகிறார், வயலூர் முருகன். வயலூர், பெயருக்கேற்ப காவிரிக் கரையில் கழனி சூழ்ந்த பசுமையுடன் விளங்குகிறது. கருவறையில் சுப்ரமணிய சுவாமி பால் வடியும் முகத்துடன் வள்ளி& தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனமளிக்கிறார். இந்த மயில் வாகனம் வலப்புறம் தெய்வானையை நோக்கித் திரும்பியிருக்கிறது. இதுவும் அபூர்வ தோற்றமே.
இந்த முருகனை சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று சுடர்களும் வழிபட்டு பேறு பெற்றதால் இது ஜோதிதலமாகத் திகழ்கிறது. முருகன் வேல் கொண்டு உருவாக்கிய சக்தி தீர்த்தத்தை குமார தீர்த்தம் என்றும் அழைக்கிறார்கள். அருணகிரிநாதர் விராலி மலை மலையில் தங்கி இருந்தபோது வயலூர் வர, அவரிடம், ‘திருப்புகழ் பாடு,’ என முருகன் கூறியதாக தலபுராணம் கூறுகிறது.
இங்கு வந்த அருணகிரியார் கணபதியை துதித்து ‘கைத்தல நிறை கனி’ என்று துவங்கும் பாடலைப் பாடியிருக்கிறார். இவர் இந்த வயலூர் தலத்தில் பாடிய 18 திருப்புகழ் பாடல்கள், பொய்யா கணபதியின் அருளால் உருவானது என்பது இத்தலத்தின் இன்னொரு சிறப்பு. இந்த பொய்யா கணபதியின் கையில் உள்ளது விளாங்கனி. இவர் சந்நதி அருகே அருணகிரிக்கு பீடம் உள்ளது. தட்சிணாமூர்த்தி, பொய்யா கணபதி, அருணகிரி மூவரையும் ஒருங்கே தரிசிப்பது இத்தலத்தில் மட்டுமே முடியும். பொய்யா கணபதி சந்நதியை அடுத்து முத்து குமாரசுவாமி சந்நதி உள்ளது.
மயில்மேல் அமர்ந்து காட்சி தருகிறார் அவர். தீராத வினை தீர்க்குமிடம், தீவினை நாடாமல் தடுக்கும் இடம், அறியாமல் செய்த பாவம் அகற்றும் இடம், அன்னை தந்தையை வழிபட்டு அமர வாழ்வு பெற அறிவுறுத்தும் தலம், சூரியன் சாயாதேவியுடன் நவக்கிரக மண்டலத்தில் அமர்ந்த தலம் என வயலூரின் பெருமைகள் ஏராளம். திருப்புகழ் தந்த தலம் முக்தியை நல்கும் சக்தி மிகுந்த தலம், மங்கள புகழ் மணக்கும் தங்கத் திருப்பதி என பல பெருமைகள் தன்னகத்தே கொண்டது. திருச்சி மெயின்காட் கேட்டிலிருந்து 5 கி.மீ தூரத்தில் வயலூர் ஆலயம் அமைந்துள்ளது.