கோவை: வால்பாறை அருகே 6 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.
மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட் பகுதியில் குடியிருப்பில் தங்கியிருந்து தேயிலை தோட்டத்திற்கு தனது மனைவியுடன் வேலைக்கு சென்று வருகிறார். கடந்த வாரம் மோனிகா தேவி வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அதன் அருகே அவரது மகள் ரோஷினிகுமாரி நின்றிருந்தார்.
அப்போது தேயிலை தோட்டத்திற்குள் மறைந்து இருந்த சிறுத்தை ஒன்று திடீரென வெளியே வந்து, அங்கு நின்றிருந்த சிறுமி ரோஷினி குமாரியின் மீது பாய்ந்து கழுத்தை கவ்வி தரதரவென இழுத்து சென்றது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே மோனிகா தேவி வெளியில் ஓடி வந்து பார்த்தார். அப்போது சிறுத்தை, மோனிஷாகுமாரியை கவ்வி இழுத்து சென்றதை பார்த்தும் அதிர்ச்சியில் உறைந்து போய் கதறி அழுதார்.
அவரது சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுகுறித்து வால்பாறை போலீசார் மற்றும் வால்பாறை வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறுமி அணிந்திருந்த ஆடை மட்டும் ரத்தகறையுடன் தேயிலை தோட்ட பகுதியில் கிடந்தது. ஆனால் சிறுமியின் உடலை காணவில்லை.
இதையடுத்து வனத்துறையினர் குடியிருப்பையொட்டி உள்ள தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 18 மணி நேர தேடுதலுக்கு பின் சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று அதிகாலை வனத்துறையினர் வைத்து கூண்டில் சிறுத்தை சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.