சென்னை : வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் 2021ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் அமுல் கந்தசாமி. 60 வயதான இவருக்கு சமீப காலமாக அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அமுல் கந்தசாமிக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 21ம் தேதி அமுல் கந்தசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கலைச் செல்வி என்ற மனைவியும், சுயநிதி என்ற மகளும் உள்ளனர். அமுல் கந்தசாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அமுல் கந்தசாமி மறைவை தொடர்ந்து வால்பாறை தொகுதி காலியானது. எனவே அந்த தொகுதிக்கு சட்டசபை தேர்தல் (இடைத்தேர்தல்) எப்போது நடத்தப்படும் என்பதுஅனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், தமிழக சட்டப்பேரவைக்கான அடுத்த பொதுத் தேர்தல் இன்னும் 10 மாதங்களில் நடைபெறவுள்ளதால், வால்பாறை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, ஒரு தொகுதி எம்எல்ஏ காலமானால், அந்த தொகுதி 6 மாதங்களில் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால், பொதுத் தேர்தல் ஓராண்டிற்கும் குறைவான காலத்தில் வருவதாக இருந்தால், தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதே நடைமுறையாகும்.