பொள்ளாச்சி: வால்பாறை ஆழியார் சாலையில் காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் அங்காங்கே யானை நடமாட்டம் உள்ளது. வறட்சியான கலங்களில் அடர்ந்த காட்டிலிருந்து யானை உள்ளிட்ட விலங்குகள் நீர்நிலையை தேடி இடம் பெயர்கிறது.
இருப்பினும், அடர்ந்த வனத்திலிருந்து யானைகள் இடம்பெயர்வது தொடர்ந்துள்ளது. இதில் நவமலை மற்றும் ஆழியார் பகுதியில் கடந்த சில நாட்களாக மீண்டும் யானை நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர். அறிந்து, அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் சுற்றுலா பகுதியான ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் ஒற்றை யானை அடிக்கடி வந்து செல்வதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, இடம்பெயர்ந்து வந்த யானையானது, இரவு நேரத்தில் ஆழியார் பூங்கா அருகே வந்துள்ளது. அங்கு கட்டப்பட்டு வரும் மணிமண்டப சுற்றுசுவர் அருகே செல்லும் போது, அதில் ஒருபகுதி சேதமானதாக கூறப்படுகிறது. மாலைநேரத்தில் சிலநாட்களில், வால்பாறை ரோட்டில் உலா வரும் யானையால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக வால்பாறை மலைப்பாதை 2வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் இரவு நேரத்தில் குட்டியுடன் இரண்டு காட்டு யானைகள் நின்றிருந்தது. அந்த வழியாக வந்த வாகனங்களில் வந்தவர்கள் காட்டு யானைகள் சாலையில் நிற்பதை பார்த்ததும் வாகனங்களை மெதுவாக நிறுத்தினர். அப்போது அந்த வழியாக நோயாளிகளை ஏற்றி வந்த 108 ஆம்புலன்சும் நடு வழியில் நின்றது.
காட்டு யானைகள் சாலையில் நீண்ட நேரம் நின்றதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர், வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், ஆழியார் பகுதியில் அடிக்கடி சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடங்களில் யானை சுற்றித்திரிவதால், அங்குவரும் சுற்றுலா பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கவியருவி அருகே யானைகள் வராமல் தடுக்க, வனத்துறை ஊழியர்கள் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘வால்பாறை ஆழியார் சாலையில் தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் தண்ணீரை தேடி யானைகள் ஆழியார் அணைபகுதிக்குள் வருகின்றன. இதனால் வால்பாறை சாலையில் அடிக்கடி யானைகள் நின்றுகொண்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி கிடையாது. மேலும் வால்பாறை பகுதியில் உள்ளவர்கள் வந்தால் அவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ஆழியார் சோதனைச்சாவடியில் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனவிலங்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி சுற்றுலா பயனிகள் வனவிலங்கிற்கு தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.