பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி வாரிய முறைகேடு வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரித்துவரும் நிலையில், இந்த வழக்கில் கைதாகியுள்ள 2 பேருடைய வீடுகளில் நடத்திய ரெய்டில் 16 கிலோ தங்கம் மற்றும் ரூ.2.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கைதான சத்யநாராயணா வர்மாவின் வீட்டில் செய்த ரெய்டில் 16 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், வால்மீகி வாரிய மானிய தொகையில் முறைகேடு செய்த தொகையில் ஆடம்பர லம்போர்கினி கார் வாங்கியதாக அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும், அவர் சொகுசு பங்களா வாங்குவதற்காக ஒரு பில்டரிடம் கொடுத்த ரூ.2.5 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த முறைகேடு அம்பலமானதுமே, துறை சார்ந்த அமைச்சரான பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். இந்த முறைகேடு முதல்வர் சித்தராமையாவுக்கு தெரியாமலா நடந்திருக்கும் என்று பாஜ குற்றம்சாட்டியுள்ளது.