சென்னை: நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரூ.80 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வரும் சென்னை வள்ளுவர் கோட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.கலைஞரால் 1976ம் ஆண்டு வள்ளுவர் கோட்டம், சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. தற்போது, வள்ளுவர் கோட் ட புனரமைப்புப் பணிகள் ரூ.80 கோடியில் நடைபெற்று வருகிறது. அதேபோல் சைதாப்பேட்டை எம்.சி.ராஜா ஆண்கள் விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடியில், ஒரு லட்ச சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் கூடிய ஆண்கள் விடுதிக் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை களஆய்வு செய்த பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு புனரமைப்பு பணிகளை குறித்த காலத்திற்கு முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வள்ளுவர் கோட்டம் புனரமைக்கும் பணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
இந்த கோட்டத்தில் மாலை நேரங்களில் சென்னை மக்கள் வள்ளுவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், பொழுதுபோக்கு பூங்கா மற்றும் சிறப்பு உணவகம் அமைக்கப்பட உள்ளது. புதிய யுக்தியை பயன்படுத்தி மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. 1400 பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டு ரசிக்கும் அளவிற்கு மிகப்பெரிய குளிர்சாதன கூட்டு அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் பெரிய அரங்கமாக இது அமைய உள்ளது. குறள் மண்டபம் புனரமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.