சென்னை: பீகார் மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கான அறிக்கை அந்த மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது முதல்வர் நிதிஷ்குமார் பெண்கள் குறித்து சில கருத்துகள் கூறியதாக கூறப்படுகிறது. அதற்கு பெண்கள் அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறி அதற்கு முதல்வர் வருத்தமும் தெரிவித்தார். ஆனால் பாஜவினர் நிதிஷ்குமாரை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு மாநில பாஜ மகளிர் அணி சார்பில் பீகார் முதல்வரை கண்டித்து ேநற்று முன்தினம் போலீசாரின் தடையை மீறி வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டம் நடத்தினர். போலீசார் அனுமதியின்றி போராட்டம் நடந்ததால் பாஜ மகளிர் அணியை சேர்ந்த 35 பேர் மீது தடையை மீறி ஒன்று கூடுதல், மாநகர சிட்டி போலீஸ் 41 சட்டப்பிரிவு என 2 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.