*அக்டோபரில் திறப்பு சபாநாயகர் அப்பாவு தகவல்
ராதாபுரம் : வள்ளியூரில் அதிநவீன தொழில்நுட்பம், 200 படுக்கை வசதிகளுடன் ரூ.30 கோடியில் கட்டப்பட்டு வரும் மாவட்ட தலைமை மருத்துவமனை அக்டோபரில் திறக்கப்பட உள்ளதாக ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம், ராதாபுரம் யூனியன் கும்பிகுளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சீலாத்திகுளம் யூனியன் துவக்கப்பள்ளியில் கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. தலைமை வகித்த கலெக்டர் சுகுமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் முன்னிலையில் பொதுமக்களிடம் இருந்து 211 மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் 146 மனுக்கள் ஏற்கப்பட்டன. 65 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
இதையொட்டி அங்கு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு சாதனை விளக்க மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியை சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அரசுத் துறைகளின் சார்பில் தேர்வான பயனாளிகள் 67 பேருக்கு ரூ.29.43 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில் ‘‘முதல்வர் மு.க. ஸ்டாலின், ஏழை மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருவதோடு, பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண்பதில் சிறப்பாக செயல்பட்டதற்காக நெல்லை மாவட்டத்திற்கு ஏ கிரேடு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பாடுபட்ட மாவட்ட அலுவலர்களையும், நிர்வாகத்தையும் பாராட்டுகிறேன்.
ராதாபுரம், நாங்குநேரி மற்றும் சுற்று வட்டார மக்கள் நலன்கருதி வள்ளியூரில் அதிநவீன தொழில்நுட்பம், 200 படுக்கை மற்றும் அனைத்து வசதிகளுடன் ரூ.30 கோடியில் கட்டப்பட்டு வரும் மாவட்ட தலைமை மருத்துவமனை வரும் அக்டோபரில் திறக்கப்படும்.
இதேபோல் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.605.75 கோடியில் நடந்துவரும் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை கூடுதல் பணியாளர்களை நியமித்து விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்பட உள்ளது.சாமானிய மக்களின் குழந்தைகளும் உயர்கல்வி பெறுவதற்கு தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிகளவில் உயர்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகள் தமிழ்நாட்டில் தான்.
மேலும், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தகுதியுள்ளமகளிர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்ட மகளிர்களுக்கு விரைந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைமேற்கொள்ள வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்’’ என்றார்.
இதைத்தொடர்ந்து, அப்புவிளை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31.40 லட்சத்தில் ஊராட்சி அலுவலக கட்டுமானப் பணிகளை சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் சுகுமார் துவக்கிவைத்தனர்.
முன்னதாக, ராதாபுரம் வட்டம் சுற்றுலா தலமான உவரியில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட மதி அங்காடியை சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் சுகுமார் தலைமையில் திறந்துவைத்து, 171 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.8.55 லட்சம் மதிப்புள்ள ஐஸ் பெட்டிகள் வழங்கினார்.
இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், அவர்கள், மகளிர் திட்ட இயக்குநர் இலக்குவன் சேரன்மகாதேவி கோட்டாட்சியர் (பொ) சிவகாமசுந்தரி தனித்துணை கலெக்டர் ஜெயா, கும்பிகுளம் ஊராட்சி தலைவர் சந்தனமாரி, யூனியன் கவுன்சிலர் காந்திமதி, ராதாபுரம் தாசில்தார் மாரிச்செல்வம், திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.