பிரேசிலியா: பிரேசிலில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்த விபத்தில் 17 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள அலகோஸ் மலைப்பகுதியில் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 17 பேர் பலியாகினர். சுமார் 65 அடி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்தையும், இடிபாடுகளிலிருந்த உடல்களையும் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘யூனியாவோ டோஸ் பால்மரெஸ் நகருக்கு அருகிலுள்ள சுற்றுலா தலமான மலையை பார்ப்பதற்காக 40 பேர் கொண்ட சுற்றுலா பேருந்து சென்றது. திடீரென பேருந்து பழுது ஏற்பட்டதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் பலியாகினர். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றனர்.