செய்யூர்: பெரிய வெளிக்காடு ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் வைத்த கோரிக்கை வைத்திருந்தனர். அதனை ஏற்று நேற்று பள்ளிக்கு நேரில் வந்து அத்தொகுதியின் எம்எல்ஏ பாபு ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியத்தில் பெரிய வெளிக்காடு ஊராட்சி உள்ளது. இங்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி கடந்த 1968ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி பொதுப்பணி துறை அமைச்சராக இருந்தபோது ஆரம்ப பள்ளியை திறந்துவைத்தார். அதன்பின், 1980களில் இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது, 8ம் வகுப்பு வரையில் இயங்கும் இப்பள்ளியில் 83 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆனால், இங்கு கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் இடநெருக்கடியில் அமர்ந்து கல்வி பயிலும் நிலை இருந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபுவிடம், அவ்வூராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், சட்டமன்ற உறுப்பினர் அப்பள்ளியை நேரில் ஆய்வு செய்து பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் வெளிக்காடு ஏழுமலை, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் அசோக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.