அண்ணா நகர்: இன்று காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூக்கள் வாங்க காதலர்கள் குவிந்தனர். 20 வண்ண பூக்கள் கொண்ட ரோஜா ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்டது. காதலின் தொடக்கம் என்னவென்பதை அறுதியிட்டு கூற முடியாது. சங்க கால ‘தலைவன் தலைவிக்கு விடும் தூது’ முதல் இந்த காதல் கதைகள் காலத்திற்கேற்ப புது வடிவம் பெற்றுள்ளன. ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் இந்த அளப்பரிய அன்பை அங்கீகரிக்கும் வகையிலும் அதை போற்றும் வகையிலும் ஆண்டு தோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று காதலர் தினம் என்பதால் இந்த தினத்தன்று காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டை, சாக்லேட் உள்ளிட்ட விதவிதமான பரிசு பொருட்களை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர். இதனால் பூ விற்பனை கடைகளில் வழக்கத்தைவிட விற்பனை அதிகமாக இருந்தது.
நேற்று முதல் இன்று அதிகாலை வரை கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமான காதலர்கள் குவிந்தனர். இதனால் ரோஜாக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. 20 வண்ண பூக்களின் கொண்ட ஒரு பஞ்ச் ரோஜா ரூ.500ல் இருந்து 600க்கும், 20 பூக்கள் கொண்ட கட்டு ரோஜா ரூ.200ல் இருந்து ரூ.300க்கும், நோபிள்ஸ் ரக ரோஜா ரூ.400ல் இருந்து ரூ.500க்கும், ராக்ஸ்டார் ஆரஞ்ச் ரோஜா ரூ.350ல் இருந்து ரூ.450க்கும், ரெட் ரோஜா ரூ.450ல் இருந்து ரூ.550க்கும், ஜர்பூரா ரோஜா ரூ.150ல் இருந்து ரூ.250க்கும், தாஜ்மகால் ரோஜா ரூ.400ல் இருந்து ரூ.500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று முதல் இன்று காலை வரை கோயம்பேடு மார்க்கெட்டில் காதலர் தின பூக்களை வாங்குவதற்கு காதலர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பூக்களின் விலை உயர்ந்தாலும் அதனை சிறுது கூட கவலைப்படாமல் ரோஜாக்களை அள்ளி சென்றனர். இதனால் வியாபாரமும் சூடுபிடித்து அமோக லாபம் கிடைத்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்தாண்டை விட இந்தாண்டு காதலர் தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்படுவதால் வியாபாரம் அமோகமாக இருந்தது’ என்றார்.