*பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தல்
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் வளசகாடு ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 2,000 பேர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சிக்குடி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, வளசகாட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவை சேதமடைந்தது. இதனை அகற்றி புதிதாக அமைக்க வேண்டும் எனவும், இப்பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளை புதிதாக அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூறுகையில், இப்பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நெல் மூட்டைகளை எடுத்துக்கொண்டு வரும் விவசாயிகள் சாலை வசதியின்றி சிரமப்படுகின்றனர். அதுவும் மழைக்காலங்களில் பெரும் சிரமமாக உள்ளது. இப்பகுதியில் தானிய சேமிப்பு கிடங்கு மற்றும் உலர்களம் அமைத்து தர வேண்டும், என்றார்.
இதுகுறித்து குறிஞ்சிகுடியை சேர்ந்த வனத்தராயர் கூறுகையில், இப்பகுதி தெருக்களில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளது. புதிய சாலை அமைக்க வேண்டும். இப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால் நீர்த்தேக்க தொட்டி மேல் ஏறி தூய்மை செய்ய முடியாத நிலை உள்ளது. இதுபோன்று வளசகாடு பகுதியில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் சேதமடைந்துள்ளது.
மேலும் வளசக்காடு, பாளையங்கோட்டை மாதா கோவில் செல்லும் சாலை, வளசகாடு நந்தீஸ்வரமங்கலம் செல்லும் சாலை, அரசு நெல் கொள்முதல் நிலையம் செல்லும் சாலை ஆகிய சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த சாலைகளையும், நீர்த்தேக்க தொட்டிகளையும் புதிதாக அமைத்து தர வேண்டும், என்றார்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் அனில்குமாரிடம் கேட்டபோது, ஏற்கனவே வளசகாட்டில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆகியோரிடம் மனு அளித்து உள்ளதாகவும் குறிஞ்சிகுடி மற்றும் வளசகாடு கிராமங்களில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதிதாக அமைத்து தர வேண்டும் எனவும், சேதமடைந்த சாலைகளை புதிதாக அமைத்து தர வேண்டும் எனவும், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட போது மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
எனவே அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்மை கருதி தானிய சேமிப்பு கிடங்கு, உலர்களம் மற்றும் மேற்கண்ட 2 கிராமங்களில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அமைத்து சேதமடைந்த சாலைகளையும் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.