வலங்கைமான், நவ. 6: வலங்கைமான் கடைவீதி. குடவாசல் சாலையில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வலங்கைமான் கடைவீதி குடவாசல் சாலையில் மழைபெய்யும்போது மழை நீர் வடிவதற்கு வழியின்றி, சாலையில் குளம்போல் தேங்கி விடுகிறது. இதனால் அவ்வப்போது பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு மழை நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது, மழைக்காலமாக இருப்பதால் அவ்வப்போது மழைநீர் தேங்கி, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைக்காலத்தில் தொற்று நோய் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே, நெடுஞ்சாலை துறையினர், உள்ளாட்சி நிர்வாகத்தினர் இணைந்து, வலங்கைமான் கடைவீதி பகுதியில் மழைநீர் தேங்காதவாறு சாலையை சீரமைக்கவும், வடிகால் வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.