Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்கள் மனம் திறந்து பாராட்டு..!!

சென்னை: கேரள மாநிலம் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவை கோலாகலமாக கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் சமூக நீதித் தளத்தில் பல வரலாற்று முத்திரைகளைப் பதித்துள்ளார். அவற்றுள் வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் நூற்றாண்டு வெற்றி விழா பல்வேறு பெருமைகளை முதலமைச்சருக்கு தேடித் தந்துள்ளது.

தந்தை பெரியார் பங்கேற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவை கேரள மாநிலம் வைக்கத்தில் கொண்டாடுவதற்குத் திட்டமிட்டு விழா கொண்டாடி வெற்றி கண்டதுள்ளதன் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் அரசின் கொள்கை வெற்றியை இந்திய நாடு முழுமைக்கும் பறைசாற்றியுள்ளார்.வைக்கம் போராட்டம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் கோவிலுக்குள் நுழைவதற்காக நடத்திய போராட்டம் அல்ல. கோவில் இருக்கும் தெருக்களில் நடந்து செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடைத்தெறிந்த மகத்தான போராட்டம்.

வைக்கம் போரட்ட வெற்றியின் நினைவுச் சின்னமாக வைக்கம் நகரில் தந்தை பெரியார் நினைவகம் கேரள அரசு வழங்கிய 70 செண்டு நிலத்தில் தமிழ்நாடு அரசினால் கட்டப்பட்டது. இன்று அந்த வைக்கம் போராட்டத்தில் 1924 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் பங்கேற்று வெற்றி கொண்ட நூற்றாண்டு நிறைவுவிழா கேரள மாநிலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கொண்டாடப்பட்டுள்ளது. வைக்கம் நகரில் உள்ள தந்தை பெரியார் நினைவகத்தினைப் புதுப்பித்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.8 கோடியே 14 லட்சம் வழங்கினார்கள்.

இந்த நிதியின்மூலம் கேரள மாநில அரசு ஒத்துழைப்போடு வைக்கத்தில் உள்ள தந்தை பெரியாரின் கம்பீரமான தோற்றத்துடன் கூடிய சிலை, நினைவம், நூலகம் முதலியவை அழகியலோடு இணைந்த அறிவு கருவூலமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் 5000க்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளின் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. பெரியார் நினைவகத்தில் புகைப்படக் காட்சிக்கூடத்துடன் திறந்தவெளி அரங்கம், சிறுவர்பூங்கா ஆகியவை இடம் பெற்றுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகத்தின் திறப்பு விழா கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வெகு சிறப்பாகக் கொண்டபாடப்பட்டது. தமிழ்நாடு, கேரள ஆகிய இரண்டு மாநிலங்களையும் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக்கூடி இருந்தது சமூகநீதிக் கொள்கைக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவைப் புலப்படுத்துவதாக அமைந்திருந்தது.

புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகத்தைத் திறந்து வைக்கும்போது கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தம்முடைய கரத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தையும் சேர்த்து வைத்து ரிப்பன் வெட்டிய காட்சி காண்போர் அனைவரையும் நெகிழச் செய்தது. இரு மாநிலங்களின் ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்துவதாக அக்காட்சி அமைந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் நிறைவுரை ஆற்றும்போது, "வைக்கம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்ததை வரலாற்றுப் பெருமையாகக் கருதுகிறேன்.

இந்திய அளவில் ஆளுமைமிக்க தலைவர்களின் ஒருவராக இருக்கிறார் பினராயி விஜயன் பெரியாருக்கு எதிராக யாகம் நடத்திய மண்ணில் பெரியார் கொண்டாடப்படுவது தான் சமுகநீதிக்குக் கிடைத்த வெற்றி. 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட தற்போது சமூக நீதியில் வெகுதூரம் வந்துள்ளோம். எல்லோரும் எல்லாம் என்பதை சமூகநீதிக் கொள்கையாக மட்டுமல்லாமல் ஆட்சியின் கொள்கையாகவும் தமிழகத்தில் கொண்டிருக்கிறோம்" என்றவர். வைக்கம் போராட்டத்தின நினைவுகளையும் பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகளையும் பட்டியலிட்டார்.

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உரையாற்றுகையில் தந்தை பெரியார் நினைவகம் திறப்பு விழாவில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளின் ஒத்துழைப்பை நினைவுகூர்த்து, "ஒத்துழைப்பு என்பது வார்த்தைகளில் அல்ல. செயலில் வெளிப்படுகிறது. பொருளாதார சுயாட்சி உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகள் மீது தொடர்ந்து அத்துமீறல் நடந்து வரும் இந்த நிலையில் மேலும் பல மாநிலங்களுக்கு இடையே இந்த ஒத்துழைப்பை விரி- வுபடுத்த வேண்டும். வைக்கம் சத்தியாகிரகத்தில் எல்லை கடந்த சகவாழ்வையும் ஒத்துழைப்பையும் பார்த்தோம்.

கேரளாவும் தமிழகமும் அந்த சகவாழ்வையும் ஒத்துழைப்பையும் தொடர்கின்றன. தனிமனிதர்களின் சுயமரியாதைக்காக பெரியார் நின்றார் என்றால், நமது நாட்டின் சுயமரியாதைக்காக மாநிலங்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று காலம் கோருகிறது. காலம் கோரும் ஒத்துழைப்பை கேரளாவும் தமிழகமும் முன்னெடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை" என்று குறிப்பிட்டார். விழாவில் இரண்டு மாநில முதலமைச்சர்களும் பேசிய உணர்வுமிக்க உரை. இந்தியா முழுமைக்கும் பெரியாரின் சமூக நீதியையும் தேவையையும் உணர்த்தின.

இந்த விழாவின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாள மண்ணில் தந்தை பெரியாரின் சமூக நீதித் தத்துவத்தை உயர்த்திப் பிடித்து திராவிட மாடலின் கம்பீரமாக எழுந்து உயர்ந்து நிற்கிறார் என்பதைக் கண்டு மகிழ்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாபெரும் விழாவில் 2024 ஆம் ஆண்டிற்கான வைக்கம் விருதினை கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டதைச் சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான தேவநூர மஹாதேவாவுக்கு வழங்கி வாழ்த்துகள் கூறினார். இந்த விருது 5 லட்சம் ரூபாய் ரொக்கத் தொகையும் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றையும் கொண்டதாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் வைக்கம் விழாவுக்காகக் கேரளா சென்றபோது அங்கு ஒரு தேநீர் கடைக்குச் சென்று மக்களோடு மக்களாகக் கூடி தேநீர் அருந்தினார்கள். இந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் எளிய குணத்தைக் கண்டு மகிழ்ந்து பாராட்டினர். தந்தை பெரியார் நினைவகத்துடன் நூலகம் அமைந்திருப்பது இந்தப் பகுதி மக்களுக்கு, குறிப்பாக எங்களைப் போன்ற இளைஞர்களுக்குப் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஒரு மாணவி குறிப்பிட்டார்.

வைக்கம் நகரைச் சேர்ந்த ஒரு பெண். "பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சாதி காரணமாக தீண்டாமை நெருப்பால் ஒடுக்கப்பட்டுவந்த மக்களுக்கு நூறு ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார், நாராயண குரு, வக்கீல் கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் முதலானோர் போராடி, சிறைசென்று விடுதலை பெற்றுத் தந்தனர். இவர்களில் முக்கியமான தமிழ்நாட்டைச் சேர்ந்த தந்தை பெரியார் பெயரில் நினைவகமும், நூலகமும் அமைத்துத் தந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கே வந்து எங்கள் முதலமைச்சர் பினாரயி விஜயன் அவர்களோடு இணைந்து விழா நடத்துவது எங்களுக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது" என்று பாராட்டினார். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.