சென்னை: தோள்பட்டையில் எலும்பு முறிவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வீடு திரும்பினார். கடந்த மாதம் 25-ம் தேதி நெல்லை சென்றிருந்த வைகோ, அங்கு கால் இடறி விழுந்து காயம் அடைந்தார். அவருக்கு தோள் பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை அழைத்துவரப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமுடன் உள்ளதாகவும், தோள்பட்டையில் மூன்று இடங்களில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளது என அவரது மகனும், மதிமுக முதன்மைச் செயலருமான துரை வைகோ ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில், 7 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைகோ, நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் அவரை தொடர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து வைகோ வீடு திரும்பினார்.
* சைதை துரைசாமியை சந்தித்த முதல்வர்
அறுவை சிகிச்சை முடிந்து தொடர் சிகிச்சையில் இருந்த வைகோவை, முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கடந்த 1-ம் தேதி நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது அதே மருத்துவமனையில் சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சைதை துரைசாமியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது அவரது சிகிச்சை விவரத்தையும், உடல் நலம் குறித்தும் விசாரித்தார்.