திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பழநியில் தேரோட்டம் நடந்தது. தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதரித்த ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா வசந்த விழாவாக கடந்த மே 31ம் தேதி தொடங்கி, பத்து நாட்கள் விமரிசையாக நடந்தது. பத்தாம் நாளான நேற்று வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அதன்பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து சண்முக விலாச மண்டபம் சேர்ந்தார். மாலையில் அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்து அதனைத்தொடர்ந்து மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடந்தது. பின்னர் மகா தீபாராதனையாகி சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் இருப்பிடம் சேர்ந்து விழா நிறைவு பெற்றது. கடந்த சில நாள்களாவே திருச்செந்தூருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து, பாதயாத்திரையாக வந்ததால் திருக்கோயில் வளாகமே பக்தர்களால் நிரம்பி வழிந்தது. அவர்கள் அதிகாலையிலிருந்தே கடலில் புனித நீராடினர். பக்தர்கள் காவடி, அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் நேர்த்திகடனை சுவாமிக்கு செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா, பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாக தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதனையொட்டி வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்ட சுவாமி, உலா வரும் தேரோட்ட நிகழ்ச்சி, மாலை 4.30 மணியளவில் ரத வீதிகளில் நடந்தது. முன்னதாக சிறிய தேர்களில் விநாயகர், வீரபாகு உள்ளிட்ட சாமிகள் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் வைகாசி விசாகத்திருவிழா மிக சிறப்பாக நடந்தது.