மேல்மலையனூர்: மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ேகாயிலில் மாதம் தோறும் அமாவாசை நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் வைகாசி மாத அமாவாசையான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அதிகாலை முதல் காட்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து இரவு வடக்கு வாசல் வழியாக பூசாரிகள் பம்பை முழங்க வந்து ஊஞ்சல் மண்டபத்திற்கு அழைத்து வந்து அமர வைத்து தாலாட்டு பாடல்களை பாடினர். அப்போது எதிரே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி அங்காளம்மா அருள் தருவாயம்மா… ஓம்சக்தி பராசக்தி என பக்தி முழக்கமிட்டு அம்மனை மனம் உருகி வேண்டினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்களின் வருகைக்காக சிறப்பு பேருந்துகள் தமிழக அரசு சார்பில் இயக்கப்பட்டன.
நேற்று அதிகாலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் மேல்மலையனூர் நகரம் முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பிக் காணப்பட்டது.