Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

மதுரை: வைகை நதியின் தாய் அணையான பேரணை கட்டப்பட்டு நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக தோற்றமளிக்கும் நிலையில் அணையை புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களிலிருந்து வரும் மழைநீர், முல்லை பெரியாற்றிலிருந்து திறந்து விடப்படும் உபரிநீர் ஆகியவற்றை தேக்கி வைக்க ஆண்டிபட்டியில் காமராஜர் காலத்தில் வைகை அணை கட்டப்பட்டது.

கோர்ட்டில் வழக்கு; இந்த அணை கட்டப்படுவதற்கு முன்பே முல்லையாறு, கொட்டக்குடி ஆறு, மஞ்சளாறு, சுருளியாறு ஆகியவற்றுடன் முல்லை பெரியாற்றிலிருந்து வரும் தண்ணீரை தேக்கி வைத்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த 1895ல் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் முல்லை பெரியாறு அணை திட்டத்தின் தந்தையான பென்னிகுயிக்கால் பேரணை கட்டப்பட்டது. முதலில் சுடுமண்ணால் அணை கட்டும் பணிகள் துவங்கிய போதே ஆங்கிலேய தளபதி ‘சீசர் துரை’ என்பவர், ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் தான் குத்தகைக்கு எடுத்த சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் நடைபெறுவதற்காக ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் மற்ற பகுதிகளுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது எனக்கூறி மெட்ராஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

லண்டனிலிருந்து வந்த மதகுகள்: அந்த வழக்கு 1895 முதல் 1908 வரை நடந்துள்ளதாக அணையிலுள்ள கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, லண்டனில் இருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மதகுகள் மற்றும் கட்டுமான பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பின்னர் வழக்கு முடிந்ததும் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு, 10 பெரிய மதகுகளும், கள்ளந்திரி, மேலூர் பகுதிகளுக்கு 6 மதகுகளும் என 16 மதகுகள் அணையில் அமைக்கப்பட்டன. நாடு சுதந்திரமடைந்த பின், விவசாய தேவைக்காக திருமங்கலம் பிரதான கால்வாய் வெட்டப்பட்டு தற்போது வரை ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வைகை அணை கட்டப்பட்ட பின் நீராவியாதலை தடுக்க அணைக்கு அருகேயுள்ள தடுப்பணையிலிருந்து பேரணை வரை புதிதாக சிமெண்ட் கால்வாய் கட்டப்பட்டு ஆங்கிலேயர்களால் பேரணையில் கட்டப்பட்ட பழைய கால்வாயுடன் இணைத்து கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம் பிரதான கால்வாய்களுக்கு தண்ணீர் விநியோகிக்கும் பணி நடந்து வருகிறது.

துருப்பிடித்து அழியும் நிலை: சிமெண்ட் கால்வாய் கட்டப்பட்டு, பேரணையிலுள்ள பழைய கால்வாயுடன் இணைக்கப்பட்ட போது, அணையின் 16 ஷட்டர்களும் திறக்கப்பட்டது. அப்போது, திறக்கப்பட்ட ஷட்டர்கள் திறந்த நிலையிலேயே, 35 ஆண்டுகளாக காட்சிபொருளாக கிடக்கின்றன. இவ்வாறு, கம்பீரமாக காட்சியளிக்கும் மதகுகள், நாளுக்குநாள் ஈரக்காற்று மற்றும் வெயிலில் சிக்கி துருப்பிடித்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பேரணையை பாதுகாக்கப்பட்ட புராதன சின்னமாக அறிவிக்க வேண்டுமென மதுரை மாவட்ட நன்செய், புன்செய் விவசாயி சங்கத்தினர் தரப்பில் மதுரை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வருவாய் பெருகும்: அம்மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: அணை கட்டப்பட்டு நூற்றாண்டுகளை கடந்துள்ள நிலையில் அதன் பின்பகுதியில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு குடிநீர் எடுப்பதற்காக நூற்றுக்கணக்கான உறிஞ்சி கிணறுகள் அமைக்கப்பட்டு தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.அணையின் மேற்கு பகுதி முழுவதும் இயற்கை சூழல் நிறைந்து காட்சியளிக்கும் நிலையில் கிழக்கு பகுதியில் மணல் எடுக்கப்பட்டு வைகை நதி முழுவதும் மாசுபட்ட ஓடையாக காட்சியளிக்கிறது.அணை சேதமடைவது தொடர்ந்தால், அதன் கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில், தெற்கில் உள்ள சித்தர்மலை மகாலிங்கம் கோயில் போன்ற வழிபாட்டு தலங்கள் முற்றிலும் அழியும். எனவே, உள்ளூர் மக்களின் சுற்றுலா தலமாக உள்ள பேரணையில் அரசு புனரமைப்பு பணிகளை செய்து புராதன சின்னமாக அறிவித்தால் அரசுக்கும் சுற்றுலா வருவாய் பெருகும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

ரூ.2 கோடி தேவைப்படும்: மதுரை மண்டல நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், அணையின் ஷட்டர்கள் பராமரிப்பு, இதர புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.2 கோடி வரை நிதி தேவைப்படும். அரசுக்கு இதுபற்றி விரைவில் கருத்துரு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.