ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியாக உயர்ந்த நிலையில், 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, 71 அடி உயரமுள்ள வைகை அணை உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்தின் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்நிலையில், மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லையாறு, போடி கொட்டகுடி ஆறு, வைகை ஆற்றில் வரும் நீர்வரத்தால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதனால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததால், வைகை கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அணை நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்தவுடன் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.
தற்போது அணைக்கு நீர்வரத்து 2,310 கன அடியாக உள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், இன்று மாலைக்குள் அணை நீர்மட்டம் 68.50 உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்று இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுவதற்கு வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால், 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.