உளுந்தூர்பேட்டை: மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூர் நோக்கி நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை கடந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது பாதூர் காந்திநகர் என்ற இடம் அருகில் ரயில் பெட்டியின் உள்ளே இருந்த அவசர நிறுத்தம் செயினை யாரோ மர்ம நபர்கள் பிடித்து இழுத்துள்ளனர்.
இதனால் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த இடத்திலேயே நின்றது. இதனைத் தொடர்ந்து எதற்காக நிறுத்தப்பட்டது என்று ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை செய்ததில் யார் நிறுத்தியது என தெரியாததால் குழப்பம் அடைந்தனர். இதனால் பாதூர் காந்திநகர் பகுதியில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 15 நிமிடம் நிறுத்தப்பட்டு பின்னர் விழுப்புரத்திற்கு புறப்பட்டு சென்றது. இதனால் ரயில் பயணிகள் அவதி அடைந்தனர்.