சென்னை: வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்துடன் 4வது வழித்தட மெட்ரோ நிலையத்தை இணைக்கும் வகையில் ரூ.10 கோடியில் ஆகாய நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் முதல் கட்டமாக, 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது.
சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த வழித்தடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்ட பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகிறது. இந்த பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2ம் கட்ட திட்டத்தின் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4வது வழித்தடத்தில் முற்கட்டமாக பூந்தமல்லி – போரூர் வரையிலும், அதனை தொடர்ந்து போரூர் – வடபழனி – கோடம்பாக்கம் வரையிலும் மெட்ரோ ரயில் பாதை அடுத்தாண்டு இறுதியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பிரிவுகளையும் இணைக்கும் மைய பகுதியாக வடபழனி உள்ளது. இந்த வழித்தடத்தில் பிரபல வணிக வளாகம் அருகே மெட்ரோ நிலையம் அமைய உள்ளது. அதேபோல் ஏற்கனவே முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 100 அடி சாலையில் வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. எனவே முதல் மற்றும் 2ம் கட்ட திட்டத்தின் மெட்ரோ நிலையங்களை இணைப்பதற்காக ஆகாய நடைபாதை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் முதற்கட்டம் மற்றும் 2ம் கட்ட திட்டத்தின் முக்கிய இணைப்பு நிலையமாக உள்ளது. மேலும் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் சென்ட்ரல் மற்றும் வடசென்னை பகுதிகளுக்கு செல்ல வடபழனி மெட்ரோ நிலையத்திலிருந்து எளிதாக மாறி பயணிக்க முடியும். இவ்வாறாக மாறுவதற்கு ஒரு வழித்தடத்திலிருந்து சாலை மார்க்கமாக பயணித்து மீண்டும் அடுத்த வழித்தடத்தை அடைய பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகப்படுவர். எனவே இரண்டு வழித்தடங்களையும் எளிதாக இணைக்க ஆகாய நடைபாதை கட்டப்பட உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்த 6 மாதங்களில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படும். ரூ.10 கோடியில் ஆகாய நடைபாதை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்ட மெட்ரோ நிலையத்தின் டிக்கெட் கவுன்டர் தளத்திலிருந்து சுமார் 130 மீட்டர் தூரத்திற்கு 2ம் கட்ட மெட்ரோ ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுன்டர் தளத்திற்கு நேரடியாக செல்லும் வகையில் ஆகாய நடைபாதை அமைய உள்ளது. இந்த நடைபாதையானது 6 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்படுகிறது. விரைவில் இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும். இந்த ஆகாய நடைபாதை திட்டம் தொடங்கப்பட்டால் பயணிகள் நிலையத்திலிருந்து வெளியேறுவது தடுக்கப்பட்டு எளிதாக மற்ற வழித்தடத்தை அடைய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.