திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம் வடமதுரை ஊராட்சியில் 6,800க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த வட மதுரை ஊராட்சியில் 3 வருவாய் கிராம பகுதிகளாக செயல்பட்டு வருகின்றன. 69 வடமதுரை கிராமத்தில் வடமதுரை, பேட்டை மேடு, ராமாபுரம் கண்டிகை, எம்டிசி நகர் ஆகிய கிராமங்களும், 97 எர்ணாங்குப்பம் வருவாய் கிராமத்தில் எர்ணாங்குப்பம், மல்லியங்குப்பம், பெரிய காலனி, காட்டுக்கொல்லி கிராமங்களும், 98 செங்காத்த குளம் வருவாய் கிராமத்தில் பெரிய செங்காத்தகுளம், சின்ன செங்காத்த குளம், இருளர் காலனி, திருவள்ளுவர் நகர், கீழ் மாளிகைபட்டு, ஏரிக்குப்பம், ஏரிக்குப்பம் காலனி, முசிலையன் கண்டிகை, காந்திநகர், துலக்கர்பாளையம் ஆகிய கிராமங்களும் உள்ளது.
இந்த கிராம மக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் பெரிய ஊராட்சியாக இருப்பதால் சரிவர கிடைப்பதில்லை. குறிப்பாக குடிநீர் வசதி, சுகாதார வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி, மழை நீர் வடிகால் வசதி, ரேஷன் கடையின்மை, கல்வி வசதி மற்றும் நல திட்டங்கள் இந்த மூன்று வருவாய் கிராம பொதுமக்களுக்கு சரிவர கிடைப்பதில்லை. மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுக 13 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி இருப்பதாலும், திட்டப் பணிகள் மற்றும் நிவாரணம் பெறுவதில் சிரமம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே பொதுமக்களின் கோரிக்கைகள், அடிப்படை வசதிகள், அரசின் நல திட்டங்கள், நல திட்ட உதவிகள் விரைவாக கிடைக்க 3 ஊராட்சி பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக திருவள்ளூர் அருகே 6 வழி சாலை பணிகளை ஆய்வு செய்ய வந்த இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும் கோரிக்கை மனுவை அளித்தனர்.