சென்னை: வடகலை, தென்கலை பிரச்சனையில் இருதரப்பு குருக்கள்களும் மோதலை நிறுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலை பொறுத்தவரை, வடகலை, தென்கலை ஆகிய இரண்டு தரப்பில் யார் பிரபந்தம் பாடுவது என்பதுதான் சண்டை. இந்த சண்டை கடந்த 2018ம் ஆண்டு உச்சம் பெற்றது. விஷயமறிந்தவர்கள், ஏறத்தாழ நூற்றாண்டு காலமாக இரண்டு பிரிவினரும் இது தொடர்பாக பஞ்சாயத்து செய்து வருகின்றனர் என்று கூறுகின்றனர். சமீப காலமாக இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டிக்கொண்டும், தாக்கிக்கொண்டும் இருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவிய நிலையில், சண்டை பொதுமக்களின் கவனத்திற்கு வந்திருக்கிறது.
இந்த பிரச்சனையை நீதிமன்றத்தில் முடித்துக்கொள்ளலாம் என்று இரு தரப்பும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. தொடக்கத்தில் வடகலைக்கு ஆதரவாகவும், மேல் முறையீடு செய்தபோது தென்கலைக்கு ஆதரவாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது தொடர்பான மேலும் சில வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. அதில் தென்கலை மந்திரம் பாட அனுமதி மறுத்து கோயில் செயல் அலுவலர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தென்கலை பிரிவினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள் என்று இருதரப்புக்கும் நீதிபதி அறிவுறுத்தி இருக்கிறார். மேலும் வடகலை, தென்கலை பிரச்சனையில் இருதரப்பு குருக்கள்களும் மோதலை நிறுத்த வேண்டும். சின்னகாஞ்சி விளக்கொளி பெருமாள் கோயிலுக்கு வெளியே தென்கலை மந்திரம் பாட அனுமதி மறுத்த உத்தரவை ஐகோர்ட் உறுதி செய்தது. மேலும் கோயில் செயல் அலுவலர் பிறப்பித்த உத்தரவு சரியானதே என கூறிய நீதிபதி, தென்கலை பிரிவினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.