புதுடெல்லி: தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 1992ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வாச்சாத்தி மலைக் கிராமத்தில் உள்ள 18 இளம்பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு நான்கு இந்திய வனப் பணியைச் (ஐ.எப்.எஸ்) சேர்ந்த அதிகாரிகள் உள்பட 215 பேர் மீது பல பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில், உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 2011ம் ஆண்டு தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உறுதி செய்தது. இந்த நிலையில் வாச்சாத்தி பாலியல் வன்முறை வழக்கில் முதன்மையான குற்றவாளி என்று உயர்நீதிமன்றம் அறிவித்து தண்டனை பெற்ற இந்திய வனப்பணி அதிகாரி எல்.நாதன், பாலாஜி மற்றும் ஆகியோர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.வி.விஸ்வநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, \” இந்த விவகாரத்தில் தண்டனையை நிறுத்தி வைப்பது உட்பட எந்தவித நிவாரணமும் இருவருக்கும் வழங்க முடியாது. இதில் முதன்மை குற்றவாளியான எல்.நாதன் மற்றும் குற்றவாளி பாலாஜி ஆகியோரின் மேல்முறையீட்டு மனுக்கள் நிராகரித்து தள்ளுபடி செய்யப்படுகிறது. இதில் எல்.நாதன் அடுத்த ஆறு வாரத்திலும், அதேப்போன்று குற்றவாளி பாலாஜி அடுத்த ஐந்து வாரத்திலும் தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என தீர்ப்பளித்தார்.
* ஒருவருக்கு மட்டும் விலக்கு
வாச்சாத்தி வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியான ஹரி கிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கருணாகரன், ‘‘இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் எங்களது தரப்பு கோரிக்கையை கருத்தில் கொள்ளாமல் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர் குற்றச்சாட்டில் ஈடுபட்டதற்கான ஆதரம் இல்லை’’ என தெரிவித்தார். அதனை ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன், ‘‘இந்த வழக்கின் குற்றம்சாட்டப்பட்ட ஹரி கிருஷ்ணன் தரப்பு கோரிக்கை ஏற்கப்படுகிறது. அதனால் அவருக்கு மட்டும் தண்டனையில் இதுந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் அவர். ரூ.25000த்தை பிணையத் தொகையாகவும், இரண்டு பேர் உத்திரவாதத்தையும் தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.