பொள்ளாச்சி : தீபாவளி பண்டிகை முடிந்து, பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் நேற்று அதிகளவில் இருந்தது. பேருந்துகளில் ஏறி பலரும் போட்டி போட்டுக் கொண்டு இடம் பிடித்தால் பரபரப்பு உண்டானது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரில் பழைய பஸ்நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்திலிருந்து, முக்கிய விஷேச நாட்களில் சிறப்பு பஸ் இயக்கம் இருக்கும்.
இதில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த 9ம் தேதி முதல் வெளியூர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சுமார் 50க்கும் மேற்பட்ட பஸ்கள் சுழற்சி முறையில் இயக்கப்பட்டன.பொள்ளாச்சி பகுதியில் வசிப்போரில் பலர் பணி நிமித்தமாகவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கவும் சென்ற, வெளியூர்களில் வசிக்கும் ஆயிரகணக்கானோரும் தீபாவளியை கொண்டாட தங்கள் ஊருக்கு வந்ததால், பஸ் நிலைய பகுதி அடிக்கடி கூட்டமாகவே காட்சி அளித்தது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்து பொள்ளாச்சி பகுதியிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் பலரும்,நேற்று பஸ் நிலையத்தில் குவிந்தனர்.கோவை,திருப்பூர் மற்றும் பழனி,ஈரோடு, கரூர் உள்ளிட்ட வெளியூர் செல்வோர் பயணிகள் கூட்டம் நேற்று காலை முதல் அதிகளவு இருந்தது.அதிலும், மாலை நேரத்தில் திருப்பூர் செல்லும் பஸ்களில் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக காணப்பட்டது.இதில் பலர், பஸ் இருக்கையில் அமர போட்டி,போட்டு இடம் பிடித்தனர். இருப்பினும் பலரும் பஸ்சில் இடம் கிடைக்காமல்,அடுத்த பஸ் வரும் வரை காத்திருந்து சென்றனர்.தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் சென்ற பயணிகள் கூட்டம் பஸ் நிலையத்தில் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால் பரபரப்புடன் காணப்பட்டது.