கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடற்கரை அழகை காண்பதற்காகவும், சூரிய உதயம், அஸ்தமன காட்சிகளை பார்த்து ரசிப்பதற்காகவும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து பொழுதை கழிக்கின்றனர். இந்தநிலையில் கடந்த 24ம் தேதி முதல் நேற்று வரை தொடர் விடுமுறை என்பதால் ஒவ்வொரு நாளும் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர். காலையில் சூரிய உதயமாகும் ரம்மியமான காட்சியை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள் கடல் அலையில் விளையாடியும், பாறைகளில் நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். அதேபோல் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டனர்.
இதற்கு வசதியாக தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு சேவை நடத்தப்படுகின்றது. அந்த வகையில் 24ம் தேதி சுமார் 5650 பேரும், மறுநாள் 8051 பேரும், நேற்று 5700 பேரும் என கடந்த 3 நாட்களில் சுமார் 19401 பேர் படகில் சென்று கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் கடைகளில் வியாபாரம் சூடுபிடித்தது. விதவிதமான துணிமணிகள், அழகுசாதன பொருட்கள், விளையாட்டு பொருட்களை சுற்றுலாபயணிகள் நினைவுப்பொருட்களாக வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் நேற்று வரை சுற்றுலா பயணிகளால் நிரம்பியிருந்த கடற்கரை இன்று காலை வெறிச்சோடி காணப்பட்டது. வெளியூர் சுற்றுலா பயணிகள் விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிவிட்ட நிலையில், இன்று வேலைநாள் என்பதால் காலையில் உள்ளூர்வாசிகள் சிலர் மட்டும் சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். மற்றபடி கடற்கரையில் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி களையிழந்து காணப்பட்டது.