துபாய்: விடுமுறையை கழிக்க துபாய் சென்ற சிவில் இன்ஜினியர், ஸ்கூபா டைவிங் செய்த போது மாரடைப்பால் மரணமடைந்தார். அதிர்ச்சியில் அவரது சகோதரர் மயக்கமடைந்ததால் அவரும் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில், ஈத் அல் அதா விடுமுறையைக் கழிப்பதற்காகத் துபாய்க்குச் சென்றிருந்த இந்தியாவைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஐசக் பால் ஓலக்கெங்கில் (29) என்பவர், அங்கு ஸ்கூபா டைவிங் செய்தபோது ஏற்பட்ட மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், தனது மனைவி ரேஷம் மற்றும் தம்பி ஐவின் ஆகியோருடன் விடுமுறையைக் கொண்டாட துபாய் சென்றிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று, அவர்கள் அனைவரும் கடற்கரையில் உள்ள ஒரு ஸ்கூபா டைவிங் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த பயிற்சியின்போது, நீருக்கடியில் ஐசக்கிற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயிற்சியாளர்களும், மற்றவர்களும் பீதியடைந்தனர்.
உடனடியாக மீட்புக் குழுவினர், முதலில் அவரது மனைவி ரேஷத்தையும், பின்னர் மற்ற இருவரையும் கரைக்கு மீட்டனர். ஆனால், ஐசக்கை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த அதிர்ச்சியில், மருத்துவமனைக்கு வந்த அவரது தம்பி ஐவின் மயங்கி விழுந்தார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து துபாய் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பயிற்சியின்போது பயன்படுத்தப்பட்ட ஸ்கூபா டைவிங் உபகரணங்களைக் கைப்பற்றி, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே, மயங்கி விழுந்த ஐவின் தற்போது மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாகவும், அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சகோதரர்கள் இருவரும் மிகுந்த பாசத்துடன் இருந்ததால், இந்தத் துயரச் செய்தியை தம்பி ஐவினிடம் தாமதமாகவே தெரிவித்துள்ளனர். தேவையான சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு, ஐசக்கின் உடல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.