சென்னை: குரூப் – பி மற்றும் சி பிரிவில் 17,713 ஒன்றிய அரசின் காலிப்பணிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஒன்றிய அரசில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் ஏ,பி,சி மற்றும் டி தேர்வுகளை பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இதில் குரூப் ஏ – ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற பதவிகளுக்கான தேர்வுகள். இவை யுபிஎஸ்சி மூலம் நடத்தப்படுகின்றன.
இதற்கு அடுத்தபடியாக தான் பட்டப்படிப்பை கல்வி தகுதியாக கொண்டு குரூப்-பி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், ஒன்றிய அமைச்சகத்தின் துறை ரீதியான உதவி அலுவலர், கலால் ஆய்வாளர், வருமான வரி ஆய்வாளர், தணிக்கை துறை, வருமான வரி துறை மற்றும் கலால் துறையில் உதவி அலுவலர், இளநிலை புள்ளியல் துறை அதிகாரி, அஞ்சல் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கும்.
அதேபோல், 10 மற்றும் 12ம் வகுப்பு கல்வி தகுதியாக கொண்டு குரூப் சி பிரிவில் கீழ்நிலை எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் போன்ற பதவிகளுக்கான தேர்வு நடத்தப்படுகின்றன. இந்த பதவிகளை நிரப்பு வகையில் இந்தாண்டுக்கான குரூப்-பி மற்றும் சி பிரிவிற்கான தேர்வு தேதியினை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குநர் ராகுல் கூறுகையில்:
இந்தாண்டு குரூப்-பி மற்றும் குரூப்-சி பிரிவுகளில் 17,713 பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில், குரூப்-பி பிரிவில் 14,582 காலிப்பணியிடங்களும், குரூப்-சி பிரிவில் 3,131 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் -பி பிரிவிற்கு விண்ணப்பிக்க ஜூலை 4ம் தேதி கடைசி. குரூப்-சி பிரிவிற்கு விண்ணப்பிக்க ஜூலை 18ம் தேதி கடைசி நாள். இதற்கான எஸ்எஸ்சி இணையதளத்தை www.ssc.gov.in மற்றும் ‘மை எஸ்எஸ்சி’ (mySSS) என்ற செயலியில் தேர்வாளர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முதல் கட்ட தேர்வு, 2-வது கட்ட தேர்வு என இரு நிலைகளை இந்த தேர்வு நடத்தப்படுகின்றன. பெண்கள், எஸ்சி, எஸ்டி, வகுப்பினர், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணமில்லை. கடந்தாண்டு தென்மண்டலத்தில் மட்டும் (தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, புதுச்சேரி) 18.50 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதினர்.
இந்தாண்டு அதைவிட கூடுதலாக தேர்வர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்தாண்டு பணியாளர் தேர்வாணையத்தில் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான தேர்வர்கள் விண்ணப்பித்து தேர்வுகளை எழுதி அரசு பணிகளில் சேர வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.