ஹர்தோய்: டெல்லியிலிருந்து அசாமின் டிப்ருகார் செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டம் டலேல்நகர் – உமர்தாலி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் தண்டவாளத்தில் மரக் கட்டைகளை மர்ம நபர்கள் கட்டி வைத்திருந்தனர். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரயிலின் ஓட்டுநர், அவசர பிரேக் பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார். பின்னர், மரக் கட்டைகளை அகற்ற வேண்டி ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்டவாளத்தின் குறுக்கே கம்பிகளால் கட்டப்பட்டிருந்த மரக்கட்டையை அப்புறப்படுத்தினர். சில மணி நேர தாமதத்திற்கு பின் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில், அசாமை நோக்கிச் சென்றது. ரயிலின் ஓட்டுநர் விழிப்புடன் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதேபோல், கத்கோடம் எக்ஸ்பிரஸ் ரயிலையும் தடம்புரளச் செய்ய முயற்சிக்கப்பட்டது. ரயில் ஓட்டுநரின் விழிப்புணர்வால் இந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டது.
இதுகுறித்து உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நீரஜ் குமார் ஜடவுன் சம்பவ இடத்திற்கு சென்று ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த மரக்கட்டையை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடந்த இதேபோன்ற ரயில் தடம்புரளச் செய்யும் முயற்சிகளும் ஒரு மாதிரி நடந்துள்ளதால், ஒரே கும்பல்தான் இந்த சதியை செய்திருக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை சந்தேகித்து விசாரித்து வருகிறது.