ஹாப்பூர்: உத்தரபிரதேச தனியார் பல்கலைக்கழகத்தில் 1,372 போலி பட்டம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பல்கலையின் தலைவர் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம், ஹாப்பூரில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் போலி பட்டங்கள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதையடுத்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு அதிரடிப்படை குழுவினர் பல்கலைக்கழகத்தில் நடத்திய சோதனையில் 1,372 போலி பட்டங்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் தலைவர் விஜேந்திர சிங் ஹுடா, துணைவேந்தர் நிதின் குமார் சிங் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பல் பல்வேறு படிப்புகளுக்கான போலி சான்றிதழ்களை ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சோதனையின்போது 262 போலி தற்காலிக மற்றும் இடம்பெயர்வு சான்றிதழ்களும், பல லட்சம் ரூபாய் ரொக்கம், 14 செல்போன்கள் மற்றும் ஏழு மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டன.
பல்கலைக்கழகத்தின் தலைவர் விஜேந்திர சிங் ஹுடா, ஏற்கனவே பல கோடி ரூபாய் பைக் போட் ஊழல் வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகத்தில் போலி பட்டங்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு படிப்புகளுக்கு வழங்கப்படுவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.