ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா அருகே, விமானப்படைக்கு சொந்தமான மிக்-29 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. பஞ்சாப் மாநிலம் அடம்பபூரில் இருந்து பயிற்சிக்காக ஆக்ரா சென்று கொண்டிருந்தபோது விழுந்து நொறுங்கியது.
இந்திய விமானப்படை மிக்-29 விமானம் வழக்கமான பயிற்சிக்காக பஞ்சாபின் அடம்பூரில் இருந்து ஆக்ரா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென ஏற்பட்ட விபத்தால், விமானம் உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு அருகிலுள்ள காகரோலில் உள்ள சோங்கா கிராமத்தில் ஒரு வயலில் விழுந்தது. விபத்தின் போது விமானத்தில் 2 விமானிகள் இருந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட சில நொடிகளில் விமானி மற்றும் துணை விமானி இருவரும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து தப்பித்ததாக பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. விபத்திற்குள்ளாகி விமானம் கீழே விழுந்தத்தில் தீ பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஏதேனும் தொழில்நுட்ப பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் விபத்து குறித்து நீதிமன்ற விசாரணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.