ஸ்ரீபெரும்புதூர்: உத்திரமேரூர், மணிமங்கலத்தில் அம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா நடந்தது. குன்றத்தூர் ஒன்றியம், மணிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், 28ம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழாவும், 24ம் ஆண்டு தீமிதி திருவிழாவும் நேற்று முன்தினம் நடைபெற்றது. தீமிதி திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்திக்கடனை செலுத்தினர். மேலும் அலகு குத்தி டிராக்டர் மற்றும் ஆட்டோ இழுத்தனர்.
இதில் மணிமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சேத்துப்பட்டு, மலைப்பட்டு, படப்பை, கரசங்கால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேவி கருமாரியம்மனை வழிபட்டு சென்றனர். உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் ஸ்ரீ திரிசூலகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், 40ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. முன்னதான, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை முடிந்தபின் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கோயில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி யாக வேள்வி பூஜைகள் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், 1008 பெண்கள் கலந்துகொண்டு மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், லட்சுமி பாக்கியம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கவும், மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும் திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். மாலை விரதமிருந்த பக்தர்கள் திருப்புலிவனம் குளக்கரையில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயில் வளாகத்தில் மூட்டப்பட்டிருந்த தீகுண்டத்தில் தீமிதித்து அம்மனை வழிபட்டனர்.