டேராடூன்: உத்தரகாண்டில் ஏற்பட்ட கோர நிலச்சரிவு காரணமாக தொழிலாளர் முகாம் அடித்து செல்லப்பட்டதால் 9 பேர் மாயமாகினர். அதனால் பக்தர்கள் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தியாவின் மிக புனிதமான ஆன்மீக யாத்திரைகளில் ஒன்றான சார் தாம் யாத்திரை, யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு புனிதத் தலங்களையும் உள்ளடக்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்கி ஆறு மாதங்கள் நடைபெறும் இந்த யாத்திரையின் போது, நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் உத்தரகாண்டிற்கு வருகை தருகின்றனர்.
பொதுவாகவே, இந்த காலகட்டத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு நாட்களுக்கு அம்மாநிலத்திற்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்து, அதி கனமழை மற்றும் இடியுடன் கூடிய புயலுக்கு வாய்ப்புள்ளதாக கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த கனமழை எச்சரிக்கைக்கு மத்தியில், உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள சிலாய் பகுதியில், கட்டப்பட்டு வரும் ஓட்டல் ஒன்றின் அருகில் தங்கியிருந்த தொழிலாளர்களின் முகாமை இந்த நிலச்சரிவு முற்றிலுமாக அடித்துச் சென்றது. முகாமில் இருந்த 19 தொழிலாளர்களில் 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், 9 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த துயரச் சம்பவத்தாலும், கனமழை எச்சரிக்கையாலும் சார் தாம் யாத்திரை ஒரு நாள் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.