டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர்சிங் தாமி தலையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் 2021 -22ம் நிதியாண்டிற்கான சிஏஜி அறிக்கையை சட்டப்பேரவையில் மத்திய தணிக்கை வாரியம் சமர்பித்தது.
அதில், காடு வளர்ப்புக்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. 2019 முதல் 2022 வரை காடு வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூ.13.86 கோடி நிதி வேறு பணிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதில் கட்டிடங்களைப் புதுப்பித்தல், நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு பணம் செலுத்துதல், லேப்டாப், ஐபோன், ஏசி, பிரிட்ஜ் வாங்கவும் மற்றும் அலங்கார பணிகளுக்கும் அந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளன.