கேதர்நாத்: உத்தரகண்ட் மாநிலம் கேதர்நாத் சுற்றுலா பயணிகளுக்கான ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து தத்தளித்த வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் பகுதியில் ஆன்மீக யாத்திரையில் பயணம் செய்த ஹெலிகாப்டர் ஒன்று ஹெலிபேடில் தரையிறங்குவதற்கு முன்பாக திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது. கெஸ்ட்ரல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஆன்மீக யாத்திரைகள் வரக்கூடிய யாத்திரிகளுக்கு ஹெலிகாப்டர் சேவையை வழங்கி வருகிறது.
சிர்சி ஹெலிபேட்யிலிருந்து ஆன்மீக யாத்திரைகளை ஏற்று கொண்டு கேதர்நாத் பகுதியில் இருக்கக்கூடிய ஹெலிபேடிற்கு தரை இறங்குவதற்கு முன்பாக ஹெலிகாப்டரின் ரோட்டாரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்க முடியாமல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ஹெலிபேடில் தரையிறங்க முடியாமல் மேலேயே வட்டமடித்து கொண்டிருந்தது.
இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஹெலிகாப்டரால் விபத்து ஏற்படுமோ என்று அஞ்சி ஓடினர். இருப்பினும் ஹெலிபேடிலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தரையிலேயே தரையிறங்கியது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதில் மொத்தம் 7 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பியுள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.