சிம்லா: உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக கேதார்நாத்தில் சிக்கித் தவிக்கும் 1,500 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிரது. உத்தரகாண்ட் மாநிலம் ஜங்கல்சட்டி பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பால் மிக பலத்த மழை பெய்தது. கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதை தடை ஏற்பட்டது. பெரும்மழையால் டெஹரி, ருத்ரபிரயாக் மாவட்டங்களில் பெருத்த சேதம் ஏற்பட்டது. மீட்புப் பணியில் இந்திய விமானப் படையின் சினூக் மற்றும் எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரகாண்டை ேபான்று இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பால் சிம்லா மற்றும் குலு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன 45 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கேதார்நாத் செல்லும் வழியில் சிக்கித் தவித்த 6,980க்கும் மேற்பட்ட பக்தர்கள் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 1,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர். இதில் 150 பேர் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறினர். இதுகுறித்து உத்தரகாண்ட் மாநில பேரிடர் செயலாளர் வினோத் குமார் சுமன் கூறுகையில், ‘கேதார்நாத்தில் இன்னும் 1,000 பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அங்கு பேரிடர் போன்ற சூழல் இல்லை’ என்றார்.